Wednesday, January 18, 2012

சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

சந்தோஷிமாதாவின் விரதம் அனைவருக்கும் எளிமையானது பலன் தருவதில் வலிமை மிக்கது. சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது; சிறந்தது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும். எண்ணம் கைகூடியபின் அந்த வெள்ளியன்று பூஜையைப் பூர்த்தி செய்து விடலாம். இந்த விரதத்திற்கு மஞ்சள்பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், சந்தனம், திரி நூல், நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், மாவிலை, பூக்கள் இவற்றை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலையும், வெல்லமுமே ஆகும். அவற்றை அவசியம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். எங்கும் செய்தாலும் செய்யுமிடம் மிகவும் அமைதியும், தூய்மையும் உடையதாக இருக்க வேண்டும். மேடை ஒன்றை அமைத்து அதன் மீது சந்தோஷிமாதா படத்தை வைத்துச் சக்திக்குத் தக்கவாறு பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். படத்தின் முன் குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். தீர்த்தம் நிறைந்த செம்பை (கலசம்) வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். செம்பிற்குள் அவரவர்கள் சக்திக் கேற்ப நாணயம் ஒன்றைப் போட வேண்டும். பின்னர் செம்பின் மீது மாவிலைகளை வைத்து அதன் மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும். அதற்குச் சந்தனத்தாலும், பூக்களாலும் அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மஞ்சளினால் பிள்ளையார் பிடித்துச் கலசத்திற்கு எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும். அல்லது பிறரைப் படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். அதன் பின் கலசத்தில் உள்ள நீரைப் பூஜைக்கு வந்தவர்களுக்குத் தீர்த்தமாகக் கொடுத்து வீடு முழுவதும் தெளித்தபின், மீதி உள்ள ஜலத்தைத் துளசிச் செடிக்கு ஊற்ற வேண்டும். நினைத்த காரியம் கை கூடிய பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்கின்ற அன்று பூரி, முந்திரிப் பாயசம் வறுத்தகடலை இவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். பின் எல்லோருக்கும் பிரசாதங்களைக் கொடுக்க வேண்டும். வீட்டில் மைத்துனர் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். அல்லது வெளியார் குழந்தைகள் எட்டுப் பேருக்கு உணவு படைக்க வேண்டும். இவர்களில் யாருக்கும் கண்டிப்பாகத் தட்சிணை ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது. விரதம் தொடங்கி விரதம் பூர்த்தியாகிறவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பவர்கள் புளியோ, புளிப்புப் பதார்த்தங்களோ தயிர், மோர் கண்டிப்பாகக் சாப்பிடக்கூடாது. விரதம் பூர்த்தியாகின்ற அன்று விரதம் இருக்கின்றவர்கள் புளிப்புச் சாப்பிடாமல் இருப்பதோடு மற்றவர்களுக்கும் புளிப்புப் பொருட்களை கண்டிப்பாக கொடுக்கவும் கூடாது. சந்தோஷி மாதா விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும் அதற்கு உதவுபவர்களுக்கும் எல்லாவிதமான சௌபாக்கியங்களும் உறுதியாக உண்டாகும்.

No comments:

Post a Comment