Wednesday, January 18, 2012

சூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்?

தை மாதத்தில் சூரியன் தன் பயணப் பாதையைத் தென் திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாற்றிக் கொள்வதால், இதனை உத்தராயண புண்ணிய காலம் என்று போற்றுவர்.சூரியனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. விகர்தனன், விவஸ்வான், மார்த் தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வர வாகனன், தாபனஸ், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வ தேவன், லோக சாட்சிகன் என்பவையாகும். பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற சூரியனுக்கு, இந்தியாவில் பல திருத்தலங்களில் கோயில்கள் உள்ளன. அதே போல், சூரியன் வழிபட்ட கோயில்களும் உள்ளன. இருந்தாலும், உதயம், மதியம், அஸ்தமனம் ஆகிய மூன்று காலங்களிலும் வழிபடக்கூடிய கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன.

உதய காலத்தில் வழிபட வேண்டிய கோயில்...

ஒரிஸ்ஸாவிலுள்ள புவனேஸ்வரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் கோனார்க். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த சூரியன் கோயில், ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பானால் வழிபடுவதற்காக நிர்மாணித்ததாகப் புராணம் கூறுகிறது. இருந்தாலும், கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் பதிமூன்றாம் ஆண்டில் கட்டப்பட்டதாகவும் சரித்திரம் சொல்கிறது. இது உதய காலத்தில் வழிபட வேண்டிய நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்பர். புராணகாலத் தொடர்புடைய இந்த ஆலயத்தில் தாமரை மலரில் சூரியபகவான் நின்ற நிலையில் அருள்புரிகிறார். அவரது இரு பக்கங்களிலும் நான்கு தேவியர்கள் உள்ளார்கள். ஒருபுறம் த்யௌ, ப்ருத்வி எனும் தேவியர்களும் மற்றொருபுறம் உஷை, சந்தியா எனும் தேவியர்களும் காட்சி தருகிறார்கள். இங்கு சங்கு, சக்கரம், வரதமுத்திரை, அபயஹஸ்தத்துடன் நான்கு கரங்கள் கொண்டு சூரிய பகவான் எழுந்தருளி உள்ளார். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில் மாபெரும் தேர் வடிவில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு எனப்படுகிறது. இத்தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. இத்தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் தோற்றத்தில் அதி அற்புதமாகக் கலைநுட்பத்துடன் வடிவமைத்திருப்பது மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.கோனார்க் சிற்பக் கலைக்கு உலகப் புகழ் பெற்ற கோயில்.

உச்சி காலத்தில் வழிபட வேண்டிய கோயில்

மூல்தான் பாகிஸ்தானில் உள்ள இத்திருத்தலத்தை மூல ஸ்தானம் என்றும் கூறுவர். பாகிஸ்தானில் சீனாப்(செனாப் என்றும் கூறுவர்) நதிக்கரையில் உள்ள இந்த சூரியன் கோயில், உச்சி காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்ட ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்கு குறிக்கப்பட்டடுள்ள சீனாப் நதியே, முற்காலத்தில் சந்திரபாகா எனும் நதியாக விளங்கி வந்ததால், இத்திருத்தலம் சாம்பபுரம் என்றும் கருதப்படுகிறது. பவிஷ்ய புராணமும் இத்திருத்தலத்தை சாம்பபுரம் என்று கூறுகிறது. முந்நூறு அடி உயரமுள்ள இந்த சூரியன் கோயிலில், சூரியபகவான் மனித உருவில் தமது தொடையில் கைவைத்து அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்கு தங்கத்தால் ஆன சூரிய விக்கிரகம் ஒன்று இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலும் பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பனால், தன் தொழுநோயை சூரியபகவான் நீக்கியதற்காக எழுப்பப்பட்டதாகப் புராணம் கூறுகிறது.

மாலை நேரத்தில் வழிபட வேண்டிய கோயில்

மொதேரா என்னும் திருத்தலம் குஜராத் மாநிலத்தில், அகமாதபாத் நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள சூரிய ஆலயம் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் கோயில் எனப்படுகிறது.பாழடைந்த நிலையில் உள்ள இந்த சூரியக் கோயில், பதினாறாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தினரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்கிரகம் இருந்த இடத்தின்மீது காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அமைப்பில் இக்கோயில் திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள சூரிய விக்கிரகம் வெகுகாலத்திற்கு முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று கோயில்களுமே காலத்தால் சீர்குலைந்திருந்தாலும், ஒரு காலத்தில் சௌர மார்க்கம் எனும் சூரிய வழிபாடு மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்பதற்கான நினைவுச்சின்னமாக சூரியனின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல் சிறப்பைத்தரும்.

No comments:

Post a Comment