Wednesday, January 18, 2012

சித்ரகுப்தனின் அருள்பெற வேண்டுமா?

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment