Friday, January 27, 2012

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

Thursday, January 19, 2012

சிவனின் முகவகைகள்

ஒரு முகம் - சந்திரசேகர்
இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்
மூன்று முகம் - தாணு மாலயன்
நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள
ஐந்து முகம் - சதாசிவம்
ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம்
இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர்.

நால்வகை தீப பலன்கள்

கிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்
மேற்கு முகத் தீபம் - பகை விலகும்
வடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்
தெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.

காரடையான் நோன்பு!

சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள். மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார். சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. காரணம், அவளை ஒரு தெய்வப்பிறவியாக மன்னர்கள் கருதினர். கவலையடைந்த அஸ்வபதி, மகளை நேரடியாக மாப்பிள்ளை பார்க்க அனுப்பினார். உனக்குரிய கணவனை நீயே தேர்ந்தெடு என சொல்லி அனுப்பினார். அவள் பலநாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல், ஒரு காட்டிற்கு சென்றாள். அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, தன் மனைவி ஸைவ்யையுடன் வசித்தார். அவர்களது மகன் சத்தியவான், அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான். சத்தியவான் மிகுந்த குணவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். பெற்றவர்களுக்கு சேவை செய்யும் அவனது பண்பு மிகவும் பிடித்து விட்டது, அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து காட்டில் தங்கியிருந்தனர்.

ஊர் திரும்பிய சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக தந்தையிடம் சொன்னாள். அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின் குருநாதரான நாரதமுனிவர், சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே இருக்கிறது, என்றார். அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார், என மகளிடம் அஸ்வபதி சொல்ல, வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம். அதை எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம், என்று திடமாகச் சொல்லிய சாவித்திரியை நாரதர் பாராட்டினார். அந்த திருமணத்தை தைரியமாக நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார். அஸ்வபதியும் திருமணத்தைமுடித்து விட்டார். இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி நான்கு நாட்களே இருந்த நிலையில், சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். அதன்படி, மூன்று நாட்கள் இரவும் பகலும் விழித்திருந்து உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள். அம்மா! இது சாத்தியம் தானா! என மாமனார் கேட்டார். எல்லா செயல்களிலும் உறுதிப்பாடே வெற்றிக்கு காரணம், என்று பதிலளித்த சாவித்திரி விரதத்தை துவங்கினாள். அன்று சத்தியவான், பெற்றோருக்கு பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான். சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே! என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். மாமனார் மாமியாரும் பத்திரமாக சென்று வர அறிவுறுத்தினர். அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.

நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள், உன் கணவனின் உயிர் தவிர, என்றான் எமன். தன் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும், அவரது நாடு மீட்கப்பட வேண்டும், என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் சாவித்திரி. எமன் அந்த வரத்தைத் தந்து இனி போய்விடு என்றான். சாவித்திரி பின் தொடர்ந்தாள். உமக்கு தர்மராஜா என்று பெயர் உண்டு. தர்மவான்களுடன் உறவு கொண்டால் பலனளிக்காமல் போகாது. உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும் அதற்குரிய பலன் உண்டல்லவா? என்ற சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன்,மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள் அவள். அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர். இதன் காரணமாகத்தான் சாவித்திரியின் கதையைக் கேட்பவர்கள் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பார்கள். கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குற்றி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு காரடையான் நோன்பு என பெயர் வந்தது. சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் (முதல் பருவம்) விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும்ச பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம் மாலை 6.27 மணி.

மலர்களால் பூஜிப்பது ஏன்?

அன்றலர்ந்த மலர்களால் சுவாமியை பூஜிக்கும்போது சுவாமிகளின் மனம் குளிர்கிறது. இதனால், அகம் மகிழும் சுவாமிகள் நமக்கு வேண்டிய வரங்கள் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிகின்றனர். எனவேதான், சுவாமி பூஜையின்போது பிற பூஜைப் பொருட்களை விட மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு, பூஜைக்கு சிறந்த சில மலர்களில் வாசம் செய்யும் சுவாமிகள்.

தாமரை - சிவன்
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம்- லட்சுமி
நீலோத்பலம்- உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர்- விநாயகர்
செண்பகமலர்- சுப்பிரமணியர்
நந்தியாவட்டை- நந்தி
மதுமத்தை - குபேரன்
எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி

பிரகாரம் எதற்கு?

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி. ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.

தேங்காய் உடைப்பது ஏன்?

இறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது. தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந்தபேறைக் குறிக்கிறது. இந்த நீரை சூழ்ந்திருக்கும் ஓடு, அதனை உணர முடியாமல் நம்மை சுற்றியிருக்கும் மாயையான உலகைக்குறிக்கிறது. தேங்காயை இறைவனின் திருச்சன்னதியில் உடைப்பதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள மாயையை தகர்த்தெறிந்து பரமானந்தமான பேரமுதை அடையும் செயலை உணர்த்துகிறது. இதேபோல், இச்செயலுக்கு மற்றோர் அர்த்தமும் கூறப்படுகிறது. தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும் போது அதிலுள்ள நீர் வடிந்து வெளியேறுகிறது. அதுபோல, இறைவனின் திருப்பாதம் பணியும் நாம் நமது மனதில் உள்ள ஆசைகளை வடித்து வெளியேற்றி, உள்ளத்தை தூய்மைப்படுத்தி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும்.